தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 52). வக்கீலான இவர் மாடக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஒரு வக்கீலின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு சமயபுரம் மெயின் ரோட்டில் ஒரு திருமண மண்டபம் அருகில் உள்ள அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் வந்தார். பின்னர் வீட்டிற்கு செல்ல காரில் வந்து ஏறினார். அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் மனைவி கண் முன்னே சேகரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
13 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வி.துறையூர் பகுதியை சேர்ந்த ஆச்சிகுமார் என்கிற குமார் (31), இளையராஜா (49), திருச்சி புத்தூர் பாரதி நகர் 11-வது கிராஸ் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான ஜான்சன் குமார் (49), தெற்கு இருங்களூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த நாட்டாமை என்கிற நடராஜன் (58), சேலம் சங்ககிரி, வன்னியர் காலனியை சேர்ந்த சரவண குமார் என்கிற கோழி சரவணன், பிச்சாண்டார் கோவில் தச்சர் தெருவை சேர்ந்த கனகராஜ் (41), துவாக்குடி அண்ணா நகரை சேர்ந்த மனோகர், அரியலூர் உடையார்பாளையம் மேல தெருவை சேர்ந்த சுரேஷ், ஜெயங்கொண்டம் நடராஜ் நகரை சேர்ந்த ராஜி என்கிற செல்வம் (40), திருவையாறு மேல புனவாசல் பகுதியைச் சேர்ந்த பால் எமர்சன் பிரசன்னா, கடலூர் காட்டுமன்னார் கோவில் உத்தர சோலை பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (40), கரூர் ஆதிவிநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜா, சமயபுரம் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகிய 13 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை
இதில் ஆச்சிகுமாரின் அண்ணன் மகனை சேகர் ஏற்கனவே கொலை செய்த நிலையில் பழிக்கு பழியாக சேகரின் கொலையை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நீதிபதி ஜெயகுமார் தீர்ப்பு வழங்கினார்.
இதில் இளையராஜா, தி.மு.க. நிர்வாகி ஜான்சன் குமார், நாட்டாமை என்கிற நடராஜன், கனகராஜ், ஹரி கிருஷ்ணன், செந்தில் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஆச்சிகுமார் என்கிற குமார், ராஜா ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். பால் எமர்சன் பிரசன்னா தலைமறைவாக உள்ளார். மேலும் சரவணகுமார் என்கிற கோழி சரவணன், மனோகர், சுரேஷ், ராஜி என்கிற செல்வம் உள்பட 4 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் பாலசுப்பிரமணியம் வாதாடினார்.
இந்த நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்சன் குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.