தி.மு.க. நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்


தி.மு.க. நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
x

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தி.மு.க. நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 2024 ஜனவரி மாதத்தை தகுதி ஏற்படுத்தும் நாளாக அறிவித்திட, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகிற 27-ந் தேதி வெளியிட உள்ளது. இதனையொட்டி வருகிற 27-ந் தேதி முதல் 9.12.2023 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நவம்பர் மாதம் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில் 4 நாட்க நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்த படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி வரையில் 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி முனைப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


Next Story