தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முடக்கி விட்டது. தேர்தலின் போது கொடுத்த 520 வாக்குறுதிகளில் ஒன்றை கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. தற்போது தமிழகத்தில் நான்கு முதல்வர்கள் உள்ளார்கள். அதில் அறிவிக்கப்படாத முதல்வருக்கு அமைச்சர் பதவி ஏற்பு விழா நடத்தி உள்ளனர். மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருந்தால் அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன், உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு நாட்டறம்பள்ளி நகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, நாட்டறம்பள்ளி நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.