தி.மு.க.-அ.தி.மு.க. ஓட்டு விவரம் பற்றி அரசு தரப்பில் தகவல்: கரூர் மாவட்ட கவுன்சிலர் கடத்தல் வழக்கை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தி.மு.க.-அ.தி.மு.க. ஓட்டு விவரம் பற்றி அரசு தரப்பில் தகவல்: கரூர் மாவட்ட கவுன்சிலர் கடத்தல் வழக்கை  உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கரூர் மாவட்ட கவுன்சிலர் கடத்தல் வழக்கை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு விவரம் பற்றி அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.

மதுரை


கரூர் மாவட்ட கவுன்சிலர் கடத்தல் வழக்கை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு விவரம் பற்றி அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.

துணை தலைவர் தேர்தல்

கரூர் மாவட்ட கவுன்சிலர் திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, துணை தலைவர் தேர்தலை நடத்த அனுமதி அளித்ததுடன், தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் முடிந்தபின் வாக்குகளை எண்ணலாம். முடிவை வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

கடத்தல்

இதற்கிடையே தேர்தல் நாளான கடந்த 19-ந் தேதி காலை 7 மணி அளவில் மனுதாரர் திருவிகா, ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அன்று பிற்பகலில் துணை தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. பின்பு, திருவிகா, கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, "மனுதாரர் தேர்தல் அன்று காலையில் திட்டமிட்டு கடத்தப்பட்டு உள்ளார். இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட வேறு அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று வாதாடினார்.

வாக்குகள் விவரம்

அதற்கு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, "மனுதாரர் விவகாரம் குறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பு வேட்பாளருக்கு 7 ஓட்டுகளும், எதிர்தரப்பினருக்கு 4 ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. மனுதாரர் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்தாலும் ஆளுங்கட்சி தரப்பினருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்" என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம். மனுதாரர் கடத்தல் வழக்கு விசாரணையை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story