கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்


கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மைக்கால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

மாநகராட்சி கூட்டம்

கரூர் மாநகராட்சி கூட்டம் கடந்த மே மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரூரில் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் கரூர் மாநகராட்சி கூட்டம் 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 29-ந்தேதி நடைபெற இருந்த மாநகராட்சி கூட்டம் நிர்வாக நலன் கருதி ஜூன் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜூன் மாதம் 2-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. கூட்டம் நடைபெறும் தேதியும் அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் மே மாதத்திற்கான சாதாரண மற்றும் அவசர கூட்டமும், ஜூன் மாதத்திற்கான சாதாரண கூட்டமும் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.45 ஆயிரம் செலவா?

அப்போது மே மாதத்திற்கான சாதாரண கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மண்டலம்-1, வார்டு எண்.2 குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த குளத்துப்பாளையம் குகை வழிப்பாதையின் நுழைவுவாயில் இருபுறமும் உள்ள பெயர் பலகை சேதமடைந்து தொங்கிய நிலையில் உள்ளதால் இந்த 2 ஸ்டீல் போர்டுகளை அகற்ற தயார் செய்யப்பட்ட உத்தேச மதிப்பீட்டு ரூ.45 ஆயிரத்திற்கு மாமன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தினேஷ், சுரேஷ் ஆகியோர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறும்போது, அந்த பெயர் பலகையில் எடப்பாடி பழனிசாமி படம் இருப்பதன் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்டது. கேட்டதற்கு, மீண்டும் ஒருமாதத்திற்குள் வைப்பதாக தெரிவித்தீர்கள். மேலும் அந்த பலகை எடுத்ததற்கு ரூ.45 ஆயிரம் செலவா? என கேள்வி எழுப்பினர்.

43 தீர்மானங்கள்

மேயர் கூறும்போது, அந்த பெயர் பலகை லாரி மோதி சேதமடைந்துள்ளது. அதனால் எடுக்கப்பட்டது. மறுபடியும் வைக்கணுமா, வேண்டாமா என மாமன்றத்திற்குதான் அனுமதி இருக்கிறது. பெயர் பலகை வைக்க முடியாது, என்றார். தொடர்ந்து மே மாதத்திற்கான சாதாரண கூட்டத்தில் 43 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 75 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஜூன் மாதத்திற்கான சாதாரண கூட்டத்திற்காக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் கரூர் மாநகராட்சி மண்டலம் 3-க்குட்பட்ட சணப்பிரட்டி, பசுபதிபாளையம், திண்ணப்பா நகர், அருணாச்சல நகர், ராஜா நகர், நரிக்கட்டியூர், எஸ்.வெள்ளாளப்பட்டி, காந்திகிராமம் பூங்கா போன்ற இடங்களில் புதர்கள் மற்றும் மணல் மேடுகளை அகற்றும் பணிக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பணியின் அவசியம் கருதி மாமன்ற அனுமதியை எதிர்நோக்கி மேயர் முன்அனுமதி பெற்று உடனடியாக பணிகளை மேற்கொள்ளவும் செலவினத்தை தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 15-ன் கீழ் நிர்வாக அனுமதி பெற்று விலைப்புள்ளிகள் கோரப்பட்டதில் விலைப்புள்ளிகள் வரபெற்றுள்ளதை மாமன்றத்தின் பார்வைக்கும், பதிவிற்கும் வைக்கப்படுகிறது என தீர்மானம் வைக்கப்பட்டது.

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர், எஸ்.வெள்ளாளப்பட்டியில் மண் எடுத்ததற்காக செலவு செய்துள்ளனர். என் வார்டில் எந்த பகுதி என விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார். இதற்கு அதிகாரி, மெயின்ரோடு பகுதியில் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலரை தாக்க முயற்சி

அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர், பணி செய்ததற்கு படம் இருந்தால் கொடுங்கள் என்றார். அதிகாரி கூறும்போது, தற்போது இல்லை. உங்களுக்கு கொடுக்கிறேன் என்றார். அ.தி.மு.க. உறுப்பினர், குற்றச்சாட்டு கூறுகிறோம். நீங்கள் படம் இல்லையென்றால், நீங்கள் என்றைக்கு செய்தீர்கள். என் வார்டில் அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை, என்றார். அப்போது மேயர், படம் வைத்துள்ளார்கள். நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்றார். அ.தி.மு.க. உறுப்பினர் கூறும்போது, படத்தை கொண்டு வர சொல்லுங்கள் என்றார். இதனால் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சக்திவேல் என்பவர் கோபத்துடன் அங்கிருந்த மைக்கை எடுத்து அ.தி.மு.க. கவுன்சிலரை நோக்கி அடிக்க ஓங்கினார். பின்னர் மைக்குடன் வந்து அ.தி.மு.க. கவுன்சிலரை தாக்க முயன்றார்.

தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் மேஜை, நாற்காலிகளை கீழே தள்ளிவிட்டு அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார். தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், அ.தி.மு.க. கவுன்சிலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சில தி.மு.க. கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து ஜூன் மாதத்திற்கான 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.


Next Story