தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நல உதவிகள்
கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் வீரத்தியாகி திப்பு சுல்தான் மாநில பேரவை சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. திப்பு சுல்தான் பேரவை மாநில தலைவர் சித்திக், மாநில செயலாளர் அலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாதேஷ், ஆலப்பட்டி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் திருமாவளவன் பேசியதாவது:-
திப்புசுல்தான் இந்திய சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியவர். இந்தியா மட்டுமல்லாமல் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டு, பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராடியவர். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கர்நாடக அரசு சார்பில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விழா நடத்தப்பட்டது. ஆனால் பா.ஜனதா அரசு அதை ரத்து செய்தது.
கட்டுக்கோப்பான கூட்டணி
கர்நாடக மாநில கல்வி பாடப்புத்தகத்தில் இருந்து திப்புசுல்தான் பாடப்பிரிவை அகற்றியது. அவர்களின் கைகளில் ஆட்சி இருக்கின்ற நிலையில் இப்படிப்பட்ட நிலைமை நீடிக்கிறது. அதனால் தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எச்சரிக்கிறது. 2024-ல நடைபெற கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். தி.மு.க.வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்கோப்பாக வழிநடத்துகிறார். அவர் தலைமையிலான கூட்டணி 3 தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் எதிர் அணியில் அப்படி இல்லை. அ.தி.மு.க. 2 ஆக உள்ளது. பா.ம.க. கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. தே.மு.தி.க. மவுனமாக உள்ளது. இப்போது எதிர் அணியில் கூட்டணியில் யார் உள்ளார்கள் என்றே தெரியவில்லை. 2019 முதல் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.