தி.மு.க. நிர்வாகி பங்களாவில் விடிய, விடிய அமலாக்கத்துறையினர் சோதனை
வேடசந்தூர் அருகே தி.மு.க. நிர்வாகி பங்களாவில் விடிய, விடிய அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
பங்களாவில் சோதனை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கொங்குநகரை சேர்ந்தவர் வீரா எஸ்.டி.சாமிநாதன். இவர், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார்.
மேலும் இவர் நிதி நிறுவனம், சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து சோதனை நடத்தினர்.
இதேபோல் வேடசந்தூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமுத்துபட்டியில் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
லாக்கர் திறப்பு
பங்களாவில் லாக்கர் ஒன்று இருந்தது. ஆனால் அதற்கான சாவி அங்கு இல்லை என்று கூறப்பட்டது. லாக்கருக்கான சாவி, கோவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்து வீரா எஸ்.டி.சாமிநாதனின் உதவியாளர் சாவியை கொண்டு வந்து அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
அதன்பின்னர் லாக்கரை திறந்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 30 பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் விடிய, விடிய சோதனை நடந்தது. நேற்று அதிகாலை 5½ மணி அளவில் சோதனை நிறைவு பெற்றது.
அதன்பிறகு தாங்கள் வந்த கார்களில் அமலாக்கத்துறையினர் வெளியே வந்தனர். லாக்கரில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் இதுபற்றிய விவரங்களை வெளியிட அமலாக்கத்துறையினர் மறுத்து விட்டனர்.
விசாரணை
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, வீரா எஸ்.டி.சாமிநாதன் நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அவரது வீடு, பங்களாவில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நடத்தியபோது வீரா எஸ்.டி.சாமிநாதன் வீட்டில் இல்லை. அவர் சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சோதனை தொடர்பாக சென்னையில் அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். நேற்று வேடசந்தூர் வந்த அவர், தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சோதனை குறித்த விவரங்களை தெரிவித்தார்.
-----