மரக்கன்றை முறித்து வீசிய தி.மு.க. பெண் கவுன்சிலர்
கவுண்டம்பாளையத்தில் மரக்கன்றை முறித்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வீசிய வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துடியலூர்
கவுண்டம்பாளையத்தில் மரக்கன்றை முறித்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வீசிய வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. கவுன்சிலர்
கோவை மாநகராட்சி 34-வது வார்டு கவுன்சிலர் மாலதி. தி.மு.க.வை சேர்ந்த இவர் கவுண்டம்பாளையம் பி.என்.டி. காலனி ராஜன் நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து 10 வீடு தள்ளி வசிப்பவர் சுபாஷ்.
இவர் தனது வீட்டின் முன்பு 4 வேப்ப மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறார். அங்கு கார் நிறுத்த இடையூறாக இருப்பதால் மரக்கன் றுகளை அப்புறப்படுத்துமாறு மாலதி கூறியதாக தெரிகிறது. இதற்கு சுபாஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
மரக்கன்றை முறித்தார்
இந்த நிலையில் நேற்று காலை அங்கு வந்த கவுன்சிலர் மாலதி, சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாலதி மரக்கன்றை முறித்து உள்ளார்.
மேலும் இது பற்றி யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளியுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு சென்று உள்ளார்.
இதை வீடியோவாக பதிவு செய்த சுபாஷ் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விசாரணை
இது குறித்து கவுன்சிலர் மாலதி கூறுகையில், நான் வசிக்கும் பகுதியில் உள்ள 13 அடி ரோட்டில் மரக்கன்றுகளை நடக்கூடாது என மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் அவர், நேரில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மரக்கன்றுகளை நட வேண்டாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மரக்கன்றுகள் அகற்றப்பட்டன.
ஆனால் அங்கு மீண்டும் 4 மரக்கன்றுகளை நட்டு இடையூறு செய்தது பற்றி கேட்ட என்னை தகாத வார்த்தைகளால் பேசி, எனது வாகனத்தை சேதப்படுத்தி விட்டனர்.
இது குறித்து சுபாஷ் மீது போலீசில் புகார் அளித்துஉள்ளேன் என்றார்.
இந்த பிரச்சினை தொடர்பாக துடியலூர் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.