கவர்னரை விமர்சிப்பதை கைவிட்டால் தி.மு.க.வினர் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம்; எச்.ராஜா பேட்டி
கவர்னரை விமர்சிப்பதை கைவிட்டால் தி.மு.க.வினர் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று எச்.ராஜா கூறினார்.
நம்ம ஊர் மோடி பொங்கல் விழா
திருச்சி பாலக்கரை மண்டல பா.ஜ.க. சார்பில் வி.எம்.பேட்டையில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு, பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
விழா முடிவில், எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடிக்கு எதிரான பிம்பம்
கவர்னர் மற்றும் பா.ஜ.க.வை வேண்டுமென்றே தாக்குகிறார்கள். தொடர்ந்து மறைமுகமாக மத்திய அரசையும் தாக்குகிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எப்படி பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்களோ அதே போன்று தற்போது உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
சட்டசபையில் உரையாற்றும்போது கவர்னர் சில விஷயங்களை தவிர்த்து பேசியிருக்கிறார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. மற்றொரு முக்கிய காரணம் அதில் எழுதப்பட்டிருந்தது அனைத்தும் பொய்யானவை. அதனால் தான் அவற்றை அவர் தவிர்த்து இருக்கிறார்.
சந்தோஷப்பட வேண்டும்
கவர்னருக்கு அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கஞ்சா அதிகமாக பிடிபடுகிறது. கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இப்படி தினமும் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். கவர்னர் தனது உரையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லாமல், அவர்கள் கொடுத்த பொய்யான தகவலை தவிர்த்துள்ளார். அதற்கு சந்தோஷப்பட வேண்டும். மாறாக கவர்னரை கைக்கூலிகளை வைத்து எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.
பின் விளைவுகள்
அதுபோல் தமிழகம் அன்னிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ளதாக கவர்னருக்கு அனுப்பிய உரையில் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தை விட கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு பல மடங்கு அதிகமாக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி கவர்னரை படிக்கச்சொன்னால் அவர் எப்படி படிப்பார். ஆனால் கவர்னரை பலரும் கண்டித்து வருகின்றனர்.
தற்போது கவர்னரை கண்டித்து விமர்சனம் செய்யக்கூடாது என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலைமையை புரிந்ததால் அவர் அவ்வாறு கூறியுள்ளார். கவர்னரை தொடர்ந்து எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். கவர்னரை விமர்சிப்பதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொண்டால் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.