மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்தும், அங்கு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த அம்மாநில பா.ஜ.க. அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க. மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், செயலாளர் ஹெலன் டேவிட்சன், துணை செயலாளர் குமரி விஜயகுமாரி, முன்னாள் அமைச்சர் தமிழரசி, பிரசாரகுழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன் உள்பட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். பிரதமர் மோடி படத்துடன் அவரை காணவில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கனிமொழி எம்.பி. பேச்சு

ஆர்ப்பாட்டத்தில்கனிமொழி எம்.பி. கண்டன உரையாற்றி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் எந்த மூலையில் பெண்களுக்கு பாதிப்பு என்றாலும், நாங்கள் உரத்த குரலில் எழுவோம். பா.ஜ.க. இந்த நாட்டை வன்முறையின் பக்கம் தள்ளிக்கொண்டிருக்கிறது. மதம், சாதி ரீதியாக மக்களை பிரித்தாளும் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த நடைமுறையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். தற்போது மணிப்பூரில் உலகத்தையே உலுக்க கூடிய வகையில், எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய செய்கிற வகையில் மிக மோசமான வன்கொடுமை நடந்துள்ளது.

மணிப்பூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று அங்கு ஆட்சியில் இருக்க கூடியவர்கள் தலைகுனிந்து பதவி விலக வேண்டும். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கி வைத்துள்ளது. இங்கே இருந்து (தமிழ்நாடு) டெல்லியில் கொண்டு போய் வைத்துள்ள செங்கோலை அவர்கள் (பா.ஜ.க. ஆட்சி) கையில் இருந்து பிடுங்க கூடிய நாளை விரைவில் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்றும் ஆர்ப்பாட்டம்

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'மக்களவை, மாநிலங்களவையின் நடவடிக்கைகளை ஒரு நாள் முழுவதும் ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் சம்பவம் குறித்து மட்டும் விவாதிக்க வேண்டும். அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தி.மு.க. எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன், மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோரும் கலந்துகொண்டனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று (திங்கட்கிழமை) மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story