தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு -கே.எஸ்.அழகிரி பேட்டி


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு -கே.எஸ்.அழகிரி பேட்டி
x

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கிண்டி,

ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது;-

மாபெரும் சக்தி

ஜவஹர்லால் நேரு, இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி. விவசாயம், பொருளாதார வளர்ச்சிக்கு அவர் நிறுவிய கொள்கைதான் காரணம். நேரு, இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு வந்திருக்கும்.

நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார்மயம் செய்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம். இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம்.

கூட்டணி வேறு

கொலைகாரர்களை வெளியே உலாவவிடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ?.

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி?, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டுக்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு, கொள்கை வேறு. காங்கிரஸ்-தி.மு.க. இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story