கூடலூரில் தி.மு.க., காங்கிரஸ் கண்டன பேரணி
கூடலூரில் தி.மு.க., காங்கிரஸ் கண்டன பேரணி
கூடலூர்
கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராகுல் காந்திக்கு, அவதூறு வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அந்த பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி கூடலூரில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து நேற்று மதியம் 12 மணிக்கு கண்டன பேரணி நடத்தினர். பேரணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் அம்சா தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ், முஸ்லிம் லீக் நிர்வாகி அனிபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வாசு உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய சாலை வழியாக வந்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் காந்தி திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு பேசினர்.