'தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது' -அண்ணாமலை பேட்டி


தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது -அண்ணாமலை பேட்டி
x

‘தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது’, என்று சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

சென்னை,

இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோம். இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் அவரை வாழ்த்த வேண்டும்.

தனிமனிதனை நம்பி இல்லை

மராட்டிய மாநிலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானது போல் தமிழகத்திலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்லி உள்ளேன். ஏக்நாத் ஷிண்டேவை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் கூறவில்லை.

குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் இதுதான் நிலைமை. பா.ஜ.க. எந்த தனி மனிதனையும் நம்பி இல்லை. புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாகுவார்கள். அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது. அதனை ஒட்டுவதற்கான பசை வாங்கி கொடுக்க பா.ஜ.க. கட்சி தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

தி.மு.க. ஆக்சிஜன்

தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐ.சி.யு.விலேயே உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடனேயே ஒட்டிக் கொண்டுள்ளது. தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.

தமிழகத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பா.ஜ.க. பெறும். இதனை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story