தி.மு.க. நிர்வாகியின் பதிவால் சர்ச்சை:ஹைவேவிஸ் 'வாட்ஸ்-அப்' குழு அட்மினுக்கு போலீசார் சம்மன்
தி.மு.க. நிர்வாகியின் ‘வாட்ஸ்-அப்' பதிவால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, ஹைவேவிஸ் ‘வாட்ஸ்-அப்' குழு அட்மினுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அட்மினுக்கு சம்மன்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சிலர் ஒரு 'வாட்ஸ்-அப்' குழுவில் இணைந்துள்ளனர். 'ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்கள்' என்ற பெயரில் அந்த 'வாட்ஸ்-அப்' குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் அட்மினாக விஸ்வநாதன் என்பவர் உள்ளார்.
இந்நிலையில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இந்த குழுவின் அட்மின் விஸ்வநாதனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஒரு சம்மன் அனுப்பினர்.
அதில், "ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்கள் என்ற 'வாட்ஸ்-அப்' குழுவில் கடந்த 15-ந்தேதி பகிரப்பட்டுள்ள சில தகவல்கள், சைபர் கிரைம் குற்றத்துக்குள் வருவதால் தாங்களை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது உள்ளது. தங்களது செல்போன் மற்றும் பதிவுகளுடன் 18-ந்தேதி (நேற்று) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். மேலும் அந்த குழுவில் உள்ள 141 உறுப்பினர்களை விசாரணை முடியும் வரை குழுவில் இருந்து வெளியேற்றாமல் இருக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சம்மன் நகல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க. நிர்வாகி
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, "கடந்த 15-ந்தேதி ஹைவேவிஸ் பேரூராட்சி பகுதியில் ஒரு போராட்டம் நடந்தது. அப்போது தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி ஒருவர், அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகி குறித்து 'வாட்ஸ்-அப்' குழுவில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அது சர்ச்சைக்குரிய கருத்துகள். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை செய்யவும், அறிவுரை வழங்கும் வகையிலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைவேவிசில் வைத்தே இந்த பிரச்சினை சமரசமாக பேசி முடிக்கப்பட்டு, போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.