தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்:
குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர கூட்டம்
குளச்சல் நகராட்சி அவசரக்கூட்டம் தலைவர் நசீர் (தி.மு.க.) தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் விஜயகுமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், என்ஜினீயர் ஜீவா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் விவரம் வருமாறு:-
ரகீம் (தி.மு.க.):- வார்டு சபா குழு அமைப்பில் குளறுபடி உள்ளது. ஏற்கனவே வார்டுகள் வரையறை செய்ததில் குளறுபடிகள் சீர்செய்யப்படவில்லை.
நகரமைப்பு ஆய்வாளர்:- அரசு உத்தரவுப்படிதான் வார்டு சபா குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் திருத்தம்
ரகீம்:- எனது வார்டு மக்கள் 17-வது வார்டில் உள்ளனர்.
நகரமைப்பு ஆய்வாளர்:- இது அரசு உத்தரவு, தீர்மானத்தை நிறைவேற்றுவோம். தேர்தல் நேரத்தில் திருத்தம் செய்யலாம்.
ரகீம்:- எனது வார்டு மக்களை எனது வார்டுக்குள் கொண்டு வந்தபின் தீர்மானம் நிறைவேற்றலாம்.
ஜாண்சன் (தி.மு.க.):- ஏற்கனவே வார்டு மறுசீரமைப்பு குளறுபடி வழக்கு நிலுவையில் உள்ளது. குளறுபடியை சரி செய்த பிறகு தீர்மானம் நிறைவேற்றலாம்.
தலைவர்:- திருத்தங்களை ஆணையரிடம் கூறுங்கள், திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றுவோம்.
பின்னர் தலைவர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என கூறியவாறே எழுந்து வெளியேறினார்.
உள்ளிருப்பு போராட்டம்
ஆனால், தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர் ஜாண்சன் எதிர்ப்பு தெரிவித்து அஜெண்டாவை கிழித்து எறிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 14 பேர் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் தலைமையில் கவுன்சிலர்கள் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.