தி.மு.க. பெண் கவுன்சிலரை கொலை செய்த தம்பதி கைது
கரூர் அருகே தி.மு.க. பெண் கவுன்சிலரை நகைக்காக கொலை செய்ததாக கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெண் கவுன்சிலர்
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 59). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா (47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா, சென்னசமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தார்.
கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் வந்த ரூபா அன்று இரவு வீடு திரும்பவில்லை.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ரூபா பிணமாக கிடந்தார். இதையடுத்து க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், நாகராஜன், ராஜேஷ் ஆகியோரின் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
வாக்குமூலம்
இந்த தனிப்படையினர் புன்னம்சத்திரம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், ரூபாவை ஒரு மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த தம்பதியான கதிர்வேல் (37), நித்யா (33) ஆகியோர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
திட்டம் தீட்டினர்
கதிர்வேல்-நித்யா தம்பதி கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கரூர்-ஈரோடு சாலையில் நத்தமேடு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் ரூபா தினமும் சோழ காளிபாளையத்தில் இருந்து கரூருக்கு வீட்டு வேலைக்கு வந்து பின்னர் பஸ்சில் வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபோல் நித்யாவும் கரூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துவிட்டு பஸ்சில் சென்று வந்து உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நட்பாக மாறி உள்ளது.
மேலும் ரூபா பஸ்சில் வரும்போது அதிகளவில் நகைகள் அணிந்து வந்துள்ளார். இந்த நகைகள் மீது நித்யாவிற்கு ஆசை வந்துள்ளது. இதையடுத்து அந்த நகைகளை கொள்ளையடிக்க கணவனும்-மனைவியும் திட்டம் தீட்டியுள்ளனர்.
கல்லால் அடித்துக் கொலை
இதையடுத்து கடந்த 25-ந்தேதி ரூபாவுக்கு, நித்யா போன் செய்து, புன்னம் சத்திரத்தில் ஒரு வீட்டில் 2 பேருக்கும் சேர்த்து வேலை இருப்பதாகவும், அங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும், அதனால் நீங்கள் வந்தால் நேரில் பேசி விடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ரூபாவும் நித்யா கூறியதை நம்பி சோழ காளிபாளையத்தில் இருந்து கரூருக்கு செல்லும் பஸ்சில் ஏறி கடந்த 26-ந்தேதி புன்னம் சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கினார்.
இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த கதிர்வேல்-நித்யா தம்பதி தங்களது மோட்டார் சைக்கிளில் ரூபாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது நித்யா சிறுநீர் கழிப்பதாக கூறி பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு ரூபாவை அழைத்து சென்றனர். பின்னர் ரூபாவின் கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியை 2 பேரும் சேர்ந்து பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ரூபா அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நித்யா-கதிர்வேல் தம்பதி ரூபாவை கீழே தள்ளிவிட்டு, அங்கு கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ரூபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தம்பதி கைது
இதையடுத்து 2 பேரும் சேர்ந்து ரூபாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி, மற்றொரு தங்க சங்கிலி, கம்மல் தோடு, வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து கதிர்வேல்-நித்யா தம்பதி மீது க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகைக்காக பெண் கவுன்சிலர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.