தி.மு.க. கட்டிய கட்டிடத்தை அகற்றக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரசுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. கட்டிய கட்டிடத்தை அகற்றக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. சார்பில் கட்டிய கட்டிடத்திற்கு சீல் வைக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கலவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலவை பேரூர் செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடத்துகின்றனர். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 கொடுப்போம், நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளார்கள். 2006 மற்றும் 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கலவையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 16 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. அப்போது இந்த கடடிடம் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்பொழுது தி.மு.க. ஆட்சி வந்து விட்டதால் கீழா தளத்தில் உள்ள 8 கடைகளை மீண்டும் வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அரசுக்கு சொந்தமான இடம் ஆகவே இந்த இடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி செயலாளர் சுமை தாங்கி ஏழுமலை, மாவட்ட பேரவை பொருளாளர் குமார், மாவட்ட மகளிர் அணி ராதிகா, தகவல் தொழில் நுட்ப அணி அக்ரி பாலாஜி, கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், நகர செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.