தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று மன்னார்குடியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
பேட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அடிக்கடி உறுதிப்படுத்தி வருகிறார்
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். அதில் நாங்கள் ஒரு அணிலாக செயல்பட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைக்கும்.
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை அடிக்கடி உறுதிப்படுத்தி வருகிறார். அவரோடு ஒன்றிணைந்து செயல்பட மாட்டோம் என பலமுறை சொல்லிவிட்டோம்.
நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தீய சக்தியான தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியிலும், வேதனையிலும் உள்ளனர். இதன் விளைவு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிவருவது சந்தில் சிந்து பாடுவது போல் உள்ளது. இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சசிகலா என் மீது கருத்து வேறுபாடுடன் உள்ளாரா? என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கவர்னர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது துணைப்பொதுச்செயலாளர் ரங்கசாமி, மாவட்ட செயலாளர்கள் எஸ்.காமராஜ்(திருவாரூர்), மா.சேகர்(தஞ்சாவூர்), மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணை செயலாளர் மலர்வேந்தன், ஜெயலலிதா தொழிற்சங்க மாநில பேரவை இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.