தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் நாளை நடக்கிறது
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி வழியாக நடக்கிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு 7 மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் வெகு ஜோராக நடந்து வருகிறது.
தமிழக அரசியலில் எதிரும், புதிருமான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. தங்களது அணியில் இருந்து பா.ஜ.க.வை விலக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள த.மா.கா. தனது நிலைப்பாட்டை தேர்தல் நேரத்தில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனால் அ.தி.மு.க. தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். அதேநேரத்தில் தமிழகத்தில் நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் பா.ஜ.க. தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தி.மு.க. தலைமை தாங்குகிறது.
தி.மு.க. கூட்டணியில் தற்போது காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும், கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இணைந்து பிரசார பணிகளை ஒருங்கிணைக்கவும் தி.மு.க. வியூகம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சியாக நடக்கிறது.
நாளை நடக்கிறது
இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் அக்டோபர் 1-ந்தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாதனை விளக்க கூட்டங்கள்
காணொலி வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக கட்சியின் வளர்ச்சி பணிகள், அரசின் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், நாடாளுமன்ற தேர்தல் முன்னெடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனை வழங்க உள்ளார்.
மேலும், அரசின் சாதனைகளை விளக்கி தெரு முனை கூட்டங்கள், வீடு வீடாக சாதனை விளக்க பிரசுரங்களை வினியோகிப்பது போன்ற பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.