சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும்; தி.மு.க. வலியுறுத்தல்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று வேடசந்தூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம், வேடசந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வி முருகன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் வரவேற்றார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, தெற்கு ஒன்றியத்தில் 16 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கருணாநிதியின் 80 ஆண்டு கால அரசியல் பணியை பாராட்டியும், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சென்னை எழும்பூர் ெரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும், வேடசந்தூரில் கருணாநிதிக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்றும் வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, தெற்கு ஒன்றிய தொகுதி பொறுப்பாளர் வெங்கிடுசாமி மற்றும் ஒன்றிய, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் கரிமுல்லா நன்றி கூறினார்.