போலீஸ் நிலைய சந்தேக மரணங்களுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
போலீஸ் நிலைய சந்தேக மரணங்களுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதும், அவர்கள் மீது முறையாக வழக்கு தொடர்ந்து, சட்டப்படி தண்டனை வாங்கித் தருவதும், குற்றவாளிகளை திருத்துவதும்தான் போலீசாரின் கடமை. ஆனால், இந்த தி.மு.க. அரசில் கடந்த 2 ஆண்டுகளாக ஒருசில போலீசாரே காவலர்களே நீதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, போலீஸ் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் அவலம் நடந்து வருகிறது. இதுவரை சுமார் 20 பேர் போலீஸ் நிலையங்களில் சந்தேகமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்கள்.
இவர்களுடைய மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என்று அவர்களுடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது போல, உடல்நலக்குறைவால், நெஞ்சு வலியால் இறந்தார் என்று ஒரே பல்லவியை பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்களின் உயிரோடு விளையாடுவதா...
தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, இதுவரை சுமார் 20 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டு உள்ளன. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் வறட்டு கூச்சலிட்ட இன்றைய ஆட்சியாளர்கள் சுமார் 20 போலீஸ் நிலைய மரணங்கள் நடந்துள்ள போதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஒரு சில சந்தேகத்திற்கிடமான போலீஸ் நிலைய மரணங்களை நெஞ்சு வலி மற்றும் நாள்பட்ட உடல் உபாதைகளால் இறந்துள்ளனர் என்றும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் விஷச் சாராயம் என்பதும், டாஸ்மாக் சரக்கை குடித்து இறந்தால் சயனைடு சாப்பிட்டு தற்கொலை என்பதும், தற்போதைய போலீஸ் அதிகாரிகள் கூறுவது, திரைக்கதை வசனம் எழுத கற்றுக்கொண்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஆட்சியாளர்களின் அரட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிந்து செயல்படும் ஒருசில போலீஸ் துறையினர் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இனியும் ஏற்க முடியாது.
அரசு பொறுப்பேற்க வேண்டும்
கடந்த 15-ந்தேதி மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி போலீசார் வேடன் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய வேடன் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார். அவர் மீது எந்தவித வழக்கும், எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் இல்லை என்று அவரது குடும்பத்தினரால் சொல்லப்படுகிறது. என்ன காரணத்திற்காக அவர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை சம்பந்தப்பட்ட போலீசார் கூறவில்லை. எந்தக் குற்றமும் செய்யாத அவரை, எதற்காக மறுநாள் அதிகாலை வரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார் என்பது புரியவில்லை.
அப்பாவி வேடனின் போலீஸ் நிலைய சந்தேக மரணத்திற்கு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். இந்த மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.