'தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

‘தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல' என வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவான தனிப்பெரும் கருணை நாள், வள்ளலார் தொடங்கிய தர்ம சாலையின் 156-வது ஆண்டு விழா, அவர் ஏற்றிய தீபத்துக்கு 152-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

வள்ளலார் முப்பெரும் விழாவின் சிறப்பு குழு தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வள்ளலார்-200 என்ற இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார்.

இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் திவ்யா, பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி நடப்பதை பார்த்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன், அதிர்ச்சியாக கூட இருக்கலாம். என்னை பொறுத்தவரையில், சிலர் சொல்லி வரும் அவதூறுகளுக்கு பதில் சொல்லக்கூடிய விழா தான் இந்த விழா.

திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என மு.க.ஸ்டாலின் பேசினார் என்று முன்னால் சொன்னதை மட்டும் போட்டு விட்டு பின்னால் சொன்னதை வெட்டிவிட்டு சமூக ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்யும்.

ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல தி.மு.க., ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்பவர்களுக்கு எதிரானது தான் தி.மு.க. ஆட்சி.

வள்ளலாரின் மண்

தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள், இதை நன்கு உணர்வார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று, பிற்போக்கு கயமைத்தனங்களை எதிர்க்கக்கூடிய வள்ளுவரின் மண்தான், இந்த தமிழ் மண்.

'நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையிலே' என்று முழங்கிய சித்தர்கள் உலவிய மண், நமது தமிழ் மண்'. 'இறைவன் ஒருவன்தான், அவன் ஜோதி வடிவானவன்' என்று எடுத்து சொல்லிய வள்ளலாரின் மண், இந்த தமிழ் மண்

'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் கருத்தைத்தான், தி.மு.க.வினருக்கு எடுத்துரைத்தவர் அண்ணா.

அந்த அடிப்படையில்தான், வள்ளலாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கிறோம்.

சர்வதேச மையம்

வள்ளலாரை போற்றுவது திராவிட ஆட்சியின் கடமை. வடலூரில், 'வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். ரூ.100 கோடி மதிப்பீட்டில் இதனை அமைப்பதற்கான வரைவுத்திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி ஓராண்டுக்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்டவற்றுக்காக 3 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அன்னதானம் வழங்குவது மட்டுமே வள்ளலாரின் அறநெறி அல்ல. சாதி, மத வேறுபாடுகளற்ற சமநிலைச் சமூகம் அமைக்க பாடுபடுவதுதான் வள்ளலாருடைய வழியில் நடப்பது.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்பதே வள்ளலாரின் அறநெறி.

அத்தகைய அறநெறி உலகத்தை படைக்க உறுதியேற்போம்.

பி.கே.சேகர்பாபுக்கு பாராட்டு

கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு அதிகம் போகக்கூடியவர் தான் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. அறப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை பார்ப்பதைத்தான் அவர் அதிகம் செய்து கொண்டு இருக்கிறார்.

'ஒரு நாளைக்கு 3 ஊர்களில் இருக்கக்கூடிய கோவிலை சுற்றி வரக்கூடியவர் தான் சேகர்பாபு. என்னால் 'செயல்பாபு' என்று அழைக்கப்படுகின்ற சேகர்பாபுவை, நீங்கள் பாராட்டுவதுதான் எங்களுக்கு சிறப்பு. நீங்களெல்லாம் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் என்றால், சேகர்பாபு ஆன்மிக செயற்பாட்டாளர். அதுதான் வித்தியாசம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் புகழுக்கும், சிறப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது'.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்னதானத்தை தொடங்கிவைத்தார்

இதைத்தொடர்ந்து சன்மார்க்க அன்பர்கள் மழையூர் சதாசிவம், சா.மு.சிவராமன், தனலட்சுமி, எம்.பாலகிருஷ்ணன், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.

பின்னர், வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி ஓராண்டு தொடர் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story