தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் - துரை வைகோ


தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் - துரை வைகோ
x

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று துரை வைகோ கூறினார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் ம.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசிடம் ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்படும். இதுதொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கரன்கோவிலில் விரைவில் ஊர்வலம் நடத்தப்படும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். மேலும் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதே ம.தி.மு.க. கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லை. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை முறையாக ஒதுக்குவது இல்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு தொகையை விடுவிப்பது கிடையாது. இதேபோல் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய நிதியை வழங்குவது இல்லை.இருந்தபோதிலும் தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உறுதியாக நிறைவேற்றும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்தும், நான் (துரை வைகோ) நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சி தலைமை முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story