தி.மு.க. அரசு, யாருடைய ஆதாயத்திற்காக கல்குவாரி தொழிலை முடக்குகிறது?


தி.மு.க. அரசு, யாருடைய ஆதாயத்திற்காக கல்குவாரி தொழிலை முடக்குகிறது?
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசு, யாருடைய ஆதாயத்திற்காக கல்குவாரி தொழிலை முடக்குகிறது? என்று சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் நேற்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கல்குவாரிகள், கிரஷர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அத்தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

அரசுக்கு வருவாயை ஈட்டித்தருவதோடு அரசின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிற இத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனிமவளங்கள் கடத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் 270 கல்குவாரிகள் உள்ள நிலையில் தற்போது அத்தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நடைபெறும் கல் குவாரிகளையும், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தக்கோரி தமிழக அரசுக்கு அ.தி.மு.க. சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நாள்தோறும் 15 ஆயிரம் லாரிகள் மூலமாக கனிமவளங்கள், அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்கு பதிலாக கனிமவளத்துறை குவாரிகளை நடத்தி வருகிற சிறு, சிறு, நடுத்தர தொழில் அதிபர்களை தொழில் செய்யவிடாமல் அச்சுறுத்துகிறார்கள்.

வழிமுறைகளை கடுமையாக்குவது ஏன்?

சிறிய, நடுத்தர கல்குவாரி உரிமையாளர்கள், எங்களுக்கு எந்த மானியமும், சலுகையும் தேவையில்லை, அமைதியான முறையில் தொழில் தொடங்க அனுமதியளிக்கும்படியும், சட்டதிட்டத்தில் உள்ள வழிமுறைகளை எளிமையாக்கி தரும்படியும் அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் தி.மு.க. அரசு, ஏன் அந்த வழிமுறைகளை கடுமையாக்குகிறது? யாருடைய ஆதாயத்திற்காக இதுபோன்று செய்கிறார்கள்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சிலரை தொழில் செய்ய விடாமல் முடக்கி வருகிறார்கள்.

உண்மை நிலையை கண்டறியுங்கள்

கனிம வளத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. ஆய்வு என்ற பெயரில் பல இடங்களில் கல் குவாரிகளை மூடியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர், உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள். தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு முறையற்று கனிமவளங்களை கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் எசாலம்பன்னீர், ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர் கோல்டுசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story