தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரி ஜனாதிபதியிடம் நேரில் முறையிட திமுக முடிவு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவிப்பதற்காக தி.மு.க. எம்.பி.க்கள் ஜனாதிபதியை நாளை (புதன்கிழமை) கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துவிட்டார்.இதனால், கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அவர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே, கவர்னர் ஆர்.என்.ரவி கோபத்தில் அவையை விட்டு வெளியேறினார். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஏற்கனவே டெல்லியில்தான் இருக்கிறார். எனவே, அவர் சார்பில் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு ஜனாதிபதி மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் அவரை சந்திப்பார்கள். அப்போது, தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என தெரிகிறது.