தி.மு.க. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை


தி.மு.க. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 6:37 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று திருவண்ணாமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

திருவண்ணாமலை

தி.மு.க. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று திருவண்ணாமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை அறிவித்த தி.மு.க. அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்கால் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய பிரிவு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார். அதற்கு உடனடியாக அரசாணைகளை வெளியிட்டார். வெளியிடப்பட்ட அரசாணைக்கு தேவையாக நிதியை ஒதுக்கி, இந்த திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்று கண்காணிக்கின்ற நல்ல ஆட்சியை நடத்தினார்.

வாக்குறுதிகள்

ஆனால் கடந்த 16 மாதங்களாக ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு மக்களை பாதிக்கின்ற வகையில் ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தினார்கள். தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். விரைவில் பஸ் கட்டணத்தை உயர்த்த இருக்கின்றனர். டீசல், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

தி.மு.க. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வையும், கல்விக்கடனையும் ரத்து செய்வோம் என்றனர்.

அதனையும் செய்யவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்று மூடு விழா நடத்தி வருகின்றனர். அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது.

தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்த அரசு நிறுத்தி உள்ளது. எந்தெந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு நிறுத்தினார்களோ அந்த திட்டங்களை மீண்டும் மக்களின் நல்லாதரவோடு அ.தி.மு.க. அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம்.

தி.மு.க.விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விரைவில் வருகிற எந்த தேர்தலாக இருந்தால் அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை தொண்டர்களின் ஒத்துழைப்போடு வென்றெடுக்கும். மக்களை பாதிக்கின்ற தற்போது ஆளுகின்ற தி.மு.க. அரசு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட இணை செயலாளர் அமுதா, பொருளாளர் நைனாக்கண்ணு, இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார், தொழிற்சங்க செயலாளர் பழனி, நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, தென்மாத்தூர் கலியபெருமாள், சரவணன், ராமசந்திரன், கோவிந்தராஜ், மனோகரன், மாவட்ட பிரதிநிதி சில்பிசகானாசஞ்சீவிராமன், பேரவை துணை தலைவர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story