நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் தி.மு.க. உண்ணாவிரதம்- அமைச்சர் மூர்த்தி-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் தி.மு.க. உண்ணாவிரதம்- அமைச்சர் மூர்த்தி-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

மதுரை


நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

இளைஞரணி

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த தேர்வினை ரத்து செய்து விட்டு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடத்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. மேலும் ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க. சட்டசபையில் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்டத்தை இயற்றி, கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர், அதற்கு அனுமதி தராமல் அந்த சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டார்.

எனவே கவர்னரின் இந்த செயலை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு அன்றைய தினம் நடந்ததால், இங்கு மட்டும் உண்ணாவிரத போராட்டம் 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகே மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

10 ஆயிரம் பேர்

இந்த போராட்டத்திற்கு காலை முதலே தி.மு.க. தொண்டர்கள் வரத்தொடங்கினர். 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். அதில் தி.மு.க.வின் அனைத்து அணி அமைப்பினர், பகுதி, வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடந்த இடத்தில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதா உள்பட பலரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன் உள்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கோ.தளபதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


Next Story