நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் குரலை கேட்டாலே பா.ஜ.க. அரசு நடுங்குகிறது: முதல்-அமைச்சர் அறிக்கை


நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் குரலை கேட்டாலே பா.ஜ.க. அரசு நடுங்குகிறது: முதல்-அமைச்சர் அறிக்கை
x

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் குரலை கேட்டாலே பா.ஜ.க. அரசு நடுங்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியாவின் தலைநகரிலும், பிற மாநிலங்களிலும் தலைவர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட தி.மு.க.வின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்து கொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது 'இந்தியா' கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி.

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு ஏன்?

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி, அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல். அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய பா.ஜ.க. அரசின் மந்திரி ஸ்மிரிதி இரானி, தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார்.

ஆ.ராசா பதிலடி

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் மந்திரி பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், அதற்கு ஆ.ராசா உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

''நான் கைது செய்யப்படப்போவதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?'' என்று ஆ.ராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை.

பூச்சாண்டிகளுக்கு பயப்படாது

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, ''எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்'' என்ற வகையில் பேசிய மந்திரியை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.

தி.மு.க. இத்தகைய மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும் மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள்.

பா.ஜ.க. நடுங்குகிறது

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி, சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதிமாறன் டெல்லி சட்ட மசோதா பற்றி பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க. அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி. கருணாநிதியின் நூற்றாண்டில் அவரது நினைவு போற்றும் ஆகஸ்டு 7-ந் தேதியை தொண்டர்கள் உணர்ச்சிமிகு நாளாக கடைப்பிடித்து, கண்ணியம் காத்து, கடமையாற்றியிருப்பது கண்டு நெகிழ்கிறேன்.

கருணாநிதியின் பெயர் வினைச்சொல்

கருணாநிதி என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல. தமிழ் இனம் மொழி - நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி 'உரி'க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல்.

இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கருணாநிதி என்ற பெயரைச் சொல்லுவோம். இந்தியா முழுவதும் கருணாநிதியின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story