வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகன்கள் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகன்கள் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, துவரங்குறிச்சி அருகே உள்ள வேலக்குறிச்சியை சேர்ந்தவர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் (வயது 78). தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், அப்போதைய மருங்காபுரி சட்டசபை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து 13-5-1996 முதல் 14-5-2001 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக செங்குட்டுவன் பதவி வகித்தார். அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பு அவருக்கு ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 219 வருமானம் இருந்தது. பதவி முடியும் போது செங்குட்டுவன் மற்றும் அவருடைய மகன்கள், மகள்களின் சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 1 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆகும்.
சொத்து குவிப்பு வழக்கு
அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் செங்குட்டுவன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சட்டப்பூர்வமான வருமானம் தவிர, வருமானத்துக்கு அதிகமாக ரூ.81 லட்சத்து 42 ஆயிரத்து 977 மதிப்பில் (163.45 சதவீதம் அதிகம்) சொத்து குவித்ததாக, கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனுடன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, அவரது கணவரும் முன்னாள் ராணுவ வீரருமான ராஜலிங்கம், செங்குட்டுவனின் தம்பி வடமலையின் மகள் வள்ளி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு தனி கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான செங்குட்டுவனுக்கு அக்கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் இணைந்தார்
இதன் காரணமாக 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தி.மு.க.வில் இருந்து விலகிய செங்குட்டுவன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இதனால் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீது அ.தி.மு.க. அரசால் தொடரப்பட்ட ஊழல் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று அப்போது அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
மாறாக, இந்த வழக்கு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டதுடன் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே 2021-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
மரணம்
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். முன்னதாக ஏற்கனவே அவருடைய மருமகன் ராஜலிங்கம் 22-3-2017 அன்று இறந்துவிட்டார்.
மீதமுள்ள 4 பேர் மீதான வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நீதிபதி கே.பாபு முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் 101 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். 254 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தீர்ப்பு
இந்த வழக்கில் சாட்சி விசாரணை கடந்த மாதம் 19-ந் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 25-ந் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். அன்று குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஆஜராகாததால் தீர்ப்பு 4-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகியோர் நேற்று காலை கோர்ட்டுக்கு வந்திருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தலா 3 ஆண்டு சிறை
அப்போது 4 பேரும் நீதிபதி முன் ஆஜரானார்கள். இதைத்தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும், 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி கே.பாபு தீர்ப்பு கூறினார்.
இதைத்தொடர்ந்து 4 பேரும் அபராதத்தை கோர்ட்டில் உடனடியாக செலுத்தினர். பின்னர் 4 பேரும் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றனர்.