கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
வார்டில் நிலவும் குறைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது யார்? என்பது குறித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சலும், குழப்பமும் நிலவியதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மேயர் சுந்தரி பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை வருகிற 15-ந் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதனால் அனைத்து கவுன்சிலர்களும் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த விவரம் வருமாறு:-
கீதா குணசேகரன் (தி.மு.க.) கூறுகையில், செம்மண்டலம்-கம்மியம்பேட்டை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் எந்தநிலையில் உள்ளது என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் எந்த கோரிக்கை வைத்தாலும், அது புறக்கணிக்கப்படுகிறது என்றார்.
கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
கவுன்சிலர் சக்திவேல் (பா.ஜ.க.) எனது வார்டில் மாநகராட்சி சார்பில் எந்தவொரு நிகழ்ச்சி நடந்தாலும், கவுன்சிலரான எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை. மேலும் வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தாலும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை. பா.ஜ.க. கவுன்சிலர் என்பதால் எந்தவொரு திட்ட பணிகளையும் செய்யாமல் எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து அவர் வெளிநடப்பு செய்தார். அப்போது பெரும்பாலான தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றனர். அதற்கு மேயர் பதில் அளிக்காத நிலையில், கூட்டத்தில் இருந்த சில தி.மு.க. கவுன்சிலர்கள் பதில் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள், தாங்கள் மேயரிடம் தான் கோரிக்கை வைக்கிறோம், நீங்கள் எங்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூச்சல்-குழப்பம்
அப்போது அங்கிருந்த, ஏற்கனவே இருகோஷ்டிகளாக உள்ள தி.மு.க. பெண் கவுன்சிலர்கள், உணர்ச்சிவசப்பட்டு ஒருவரையொருவர் தாக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையே 43-வது வார்டு கவுன்சிலர் பாரூக் அலியை தாக்கிய பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர், மேயர் சுந்தரிமுன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியதால், மேயர் சுந்தரி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறி, பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசாத நிலையில் பாதியிலேயே கூட்டம் முடிந்ததாக கூறி வெளியேறினார்.