100 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பத்தை 15 நாளில் அகற்ற வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
100 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பத்தை 15 நாளில் அகற்ற வேண்டும் என்று கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
திருச்சியைச் சேர்ந்த குருராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாகும். மேலும் இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. அருகில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்களுக்கு சென்று வருகின்றனர். அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு கட்சியின் கொடிக்கம்பத்தை நிறுவுவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். எனவே திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தை 15 நாளில் அகற்ற திருச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை ஜூன் மாதம் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.