திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காகத்தான் திமுக ஆட்சியில் உள்ளது - மு.க.ஸ்டாலின்
கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார், கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும் தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும் தான். ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள்.
திருமாவளவனை பார்த்தால் 60 வயது ஆனவர் போல தெரியவில்லை, மேடையில் ஏறினால் 20 வயதானவரை போல் சிறுத்தையாக சீறுகிறார், புலியாக பாய்கிறார்.
திராவிட கருத்துகளை நிலைநிறுத்தவே ஆட்சியில் உள்ளோம். திமுக ஆட்சி இருப்பதே பெரியார், அண்ணா, கருணாநிதி, திராவிட கருத்துகளை நிறைவேற்றத் தான். டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போறேன்? கலைஞர் பையன் நான். மத்திய அரசு - மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது. திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை. பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது.
திராவிட மாடல் முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் என உறுதி அளிக்கிறேன். திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.