தி.மு.க. அமைச்சர்கள் வழக்கு தொடுப்பதை கண்டு பயப்பட மாட்டேன் -அண்ணாமலை பேட்டி


தி.மு.க. அமைச்சர்கள் வழக்கு தொடுப்பதை கண்டு பயப்பட மாட்டேன் -அண்ணாமலை பேட்டி
x

தி.மு.க. அமைச்சர்கள் வழக்கு தொடுப்பதை கண்டு பயப்பட மாட்டேன். ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவதில் இருந்து பா.ஜ.க. ஒருபோதும் பின்வாங்காது என்று தஞ்சையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ரஜினி மீதான பாசம் குறையவில்லை. அரசியல் பாதையில் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்காக பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். தி.மு.க. மீது பா.ஜ.க. வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பின்னால் போகாமல் ஒரு அடி முன்னால் தான் செல்கிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தை வரை அவர்கள் கட்சி எப்படி நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அவர்கள் கட்சிக்கே உண்டு. அந்தந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள். அது குறித்து நாங்கள் கருத்து செல்ல மாட்டோம்.

பயப்பட மாட்டேன்

பா.ஜ.க. மீது தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு வருகிறது. என்மீது மின்சார துறை அமைச்சர் தரப்பில் ரூ.10 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுவரை ரூ.610 கோடியை தாண்டி ரூ.620 கோடி வரை வழக்கு தொடர்ந்துள்ளனர். அது தொடரட்டும்.

சுகாதாரத்துறை அமைச்சரை பொறுத்தவரை வழக்கு தொடர்வேன் என்றால் நான் பயப்பட மாட்டேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஹெல்த்மிக்ஸ் தொடர்பாக டெண்டர் விடப்பட்டது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஒருபோதும் பின்வாங்காது

வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். கோர்ட்டில் அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பிப்போம்.

வழக்கு தொடர்வேன் என்று மிரட்டினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். பா.ஜ.க. தான் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது.

அடுத்தடுத்து வெளிவரும்

நான் வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வைக்கும் குற்றச்சாட்டு ஆகும். ஆவணங்களை வெளியிட்டு உள்ளோம். ஆவணம் இல்லாமல் நாங்கள் எதையும் பேசவில்லை. அமைச்சர் இன்னும் பேச வேண்டும். அவர் வாயில் இருந்து இன்னும் நிறைய ஆதாரங்கள் வெளியே வர வேண்டும். அதை வைத்து பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து ஆதாரங்கள் வர உள்ளது.

நாங்கள் விளம்பரத்துக்காக இதை செய்யவில்லை. விளம்பரம் யாருக்கு தேவைப்படுகிறது என்றால் தி.மு.க. அமைச்சர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. எங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தான் விளம்பரம் தேவைப்படுகிறது.

எதுவும் செய்ய முடியாது

அடுத்த ஜனாதிபதி யார் என்பதை இந்திய மக்கள் முடிவெடுத்து விட்டனர். பாரதீய ஜனதா கட்சிக்கு 49 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இதில் விளையாட்டு காண்பிக்கிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முடிவு எடுக்கும். இந்தியாவின் பன்முக தன்மை, கலாசாரங்களை உள்ளடக்ககூடிய ஜனாதிபதி வர வேண்டும்.

இதற்கு முன்பு இதேபோல் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைத்தது. பட்டியலின தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று இப்போதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும் சரி, பொது வேட்பாளரை நிறுத்தினாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story