வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு: தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி
மனுதாரர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக கோர்ட் கூறியது.
சென்னை,
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்..
இந்த மனு மீதான விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்யன், 'பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக மனுதாரரர்கள் ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ. மகன் என்பதால் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்' என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் ப.பா. மோகன், 'மனுதாரர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் உள்ளனர்' என்றார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது' என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீது நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு கூறினார்.அதாவது, 'மனுதாரர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, விசாரணையை முடிக்க புலனாய்வு அதிகாரிக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும். மனுதாரர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.