தி.மு.க. கூட்டணி கட்சியை வீழ்த்த பா.ஜ.க.வால் மட்டுமே முடியும்;ஈரோட்டில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி
தி.மு.க. கூட்டணி கட்சியை வீழ்த்த பா.ஜ.க. வால் மட்டுமே முடியும் என்று ஈரோட்டில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
தி.மு.க. கூட்டணி கட்சியை வீழ்த்த பா.ஜ.க. வால் மட்டுமே முடியும் என்று ஈரோட்டில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
பாரதீய ஜனதா கட்சி சார்பில், ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
குடும்ப அரசியல்
ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா அல்லது அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை 2 நாட்களில் எங்கள் மாநில தலைவர் அறிவிப்பார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அங்கீகாரத்தை தேடி கொள்வார்கள்.
எனவே தி.மு.க.வை தோற்கடிக்க ஒன்றிணைந்து வியூகம் அமைத்து செயல்பட வேண்டியது அவசியம். அ.தி.மு.க. வின் 2 அணியும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்கள் கருத்து. பா.ஜ.க. இரு அணிகளை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடாது. அவர்கள் கட்சியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
ஊழல்
தி.மு.க. அரசுக்கு எதிராக மக்கள் உள்ளனர். அதனால் பா.ஜ.க. முன்னிலையில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சியினரும் ஒரே அணியில் சேர்ந்து அவர்களை எதிர்க்க வேண்டும். நாங்கள் போட்டியிட்டால் தி.மு.க. அரசின் ஊழலை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்போம். தி.மு.க. கூட்டணி கட்சியை வீழ்த்த பா.ஜ.க.வால் மட்டுமே முடியும். ஈரோடு இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாதது அவர்களது தனிப்பட்ட கருத்து. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் தேசிய கட்சியில் எங்கள் கூட்டணியில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அவருடன், சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ., விவசாய அணி மாநில துணைத்தலைவரும், குளூர் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான டி.தங்கராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.