தி.மு.க. பிரமுகரை கண்டித்து ெபாதுமக்கள் மறியல்
தி.மு.க. பிரமுகரை கண்டித்து ெபாதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை அருகே பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த எஸ்.சோலகம் பட்டியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து இரண்டு வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டது. இதையடுத்து ஒப்பந்ததாரர் பள்ளியின் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக வந்தபோது கந்தர்வகோட்டையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு முறையான கட்டிட வசதிகள் இல்லாமல் சுமார் 100 மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில், புதிய கட்டிடம் வந்தால் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதிய பொதுமக்கள் கட்டுமான பணிக்கு உரிய இடத்தை வழங்கி பணியை தொடங்குமாறு கூறியிருந்தனர். ஆனால் திடீரென கட்டுமான பணி நின்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.