தி.மு.க. பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியல் இன்று வெளியீடு -அண்ணாமலை ஏற்பாடு
தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார். சென்னை கமலாலயத்தில் இதனை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தென்காசியில் கடந்த மாதம் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி மாநிலத்தலைவர் அண்ணாமலை, "தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும். இதனை நான் வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுகிறார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. சொத்து பட்டியல் வெளியீடு
மேலும் தி.மு.க.வினர் மீதான சொத்து பட்டியலையும், ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுவதை பார்க்க, கமலாலயத்தில் அகன்ற திரை வைக்கப்படவுள்ளது. அதில் முழு விவரமும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு இல்லாத நிலையில், இந்த பட்டியலை வெளியிட்டவுடன், நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை திரையில் தோன்றி பேசவுள்ளார். இந்த பேச்சு காரசாரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டுவிட்டர் பதிவு
தி.மு.க. பிரமுகர்கள் 17 பேரின் சொத்துபட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என்பதை 10 வினாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ குறிப்பாகவும், அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கை, அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.