'தி.மு.க. ஆட்சி தமிழர்களுக்காக நடைபெறும் ஆட்சி' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சி தமிழர்களுக்காக நடைபெறும் ஆட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

‘கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,


சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். அங்கு பொங்கலிட்டும், மாணவிகள் கொடுத்த பொங்கலை சாப்பிட்டும் மகிழ்ந்தார்.

அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-

பொங்கல் விழா என்பது தை மாதத்தை தமிழரின் பெருமையாக நினைத்து, தமிழர்களின் தன்மானமாக, தமிழர்களுக்கு என்று இருக்கக்கூடிய விழாவாக நாம் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். கடந்த 6-ந்தேதி சென்னையில் இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தேன். அதே நாளில் புத்தக கண்காட்சியையும் தொடங்கி வைத்தேன். பன்னாட்டு புத்தக காட்சியும் நடக்க இருக்கிறது. சமத்துவ பொங்கல் விழாவும் நடத்த போகிறோம்.

பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழாவை வருகிற 12-ந்தேதி (நாளை) தொடங்க போகிறோம். நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சங்கமும் இணைந்து, சென்னை சங்கமத்தை 13-ந்தேதி தொடங்க உள்ளோம். ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

கீழடி அருங்காட்சியகத்தை விரைவில் திறந்து வைக்க உள்ளோம். திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் மக்கள் பெயரில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இப்படி தை மாதம் முழுவதும் அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் விழா கொண்டாடப்படுகிறது. அதனால்தான் தி.மு.க. ஆட்சியை, வெறும் கழக ஆட்சி என்ற சொல்வதோடு மட்டும் அல்ல, தமிழரின் ஆட்சி, தமிழர்களுக்காக நடைபெறும் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய பழம்பெருமையை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட விழாக்களை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story