தி.மு.க. பிரமுகர் காயங்களுடன் கிணற்றில் பிணமாக மீட்பு
கறம்பக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் காயங்களுடன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தி.மு.க. பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளாளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 50). தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக இருந்து மறைந்த அழகர் என்பவரின் மருமகனான இவர், தற்போது தி.மு.க.. கிளை செயலாளராக உள்ளார்.
விவசாயியான இவர் வழக்கமாக இரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வது வழக்கம். இதன்படி நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து 9 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றார்.
பிணமாக மீட்பு
இந்நிலையில் காலையில் நெடுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தோட்டத்தில் இருந்த கிணற்றில் ரவி பிணமாக மிதந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கறம்பக்குடி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி ரவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
சாலை மறியல்
அப்போது ரவியின் தலை மற்றும் உடல் பகுதியில் ரத்த காயங்கள் இருந்தன. இதைக்கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் அனுமதிக்கவில்லை.
ரவி உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்த உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் எனக் கூறி கறம்பக்குடி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அனைத்து பிரிவு சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பிரேத பரிசோதனை
இதற்கிடையே புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது அப்பகுதியில் அங்கும் இங்கும் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதன் பின்னர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து ரவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் ரவியின் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்குப்பதிவு செய்ய கோரியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் ரவியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது.
இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தி.மு.க. பிரமுகர் கிணற்றில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு கறம்பக்குடியில் உள்ள அனைத்து சாலைகளையும் அடைந்தனர். இதனால் பஸ் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டக்காரர்களை விடுத்து மற்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.