தி.மு.க. இளைஞர் அணிக்கு ரூ.10 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது-உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. இளைஞர் அணிக்கு ரூ.10 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது என புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடிகொண்ட அய்யனார் திடலில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக தி.மு.க. உள்ளது. தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது கிடையாது. கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.
சின்னவர் என்று அழையுங்கள்
கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது 3-ம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது. கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான்.
புதுக்கோட்டையில் இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்பு பேசியவர்கள் கூறினார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை சிலர் விமர்சித்திருப்பதை பார்க்கும் போது நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம்.
ரூ.10 கோடி நிதி
கடந்த 3 ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றதில் கிடைத்த நிதி, நன்கொடை உள்ளிட்டவற்றில் தி.மு.க. இளைஞர் அணிக்கு ரூ.10 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதனை வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தி அதில் கிடைக்கும் வட்டியை மாதந்தோறும் கட்சியில் உள்ள நிர்வாகிகள் கொடுக்கும் மனுவை பரிசீலித்து மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு உதவி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், 1,051 நிர்வாகிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுவதாக கூறினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் முத்துக்கருப்பன், மாவட்ட பிரதிநிதி வடிவேல், திருமலைராயசமுத்திரம் ஊராட்சி சின்னத்துரை, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின், கே.ராசியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ், வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
99 அடி உயர கொடிக்கம்பம்
புதுக்கோட்டை அருகே கேப்பரையில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சார்பில் 99 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கேப்பரையில் ஒரு பெண் குழந்தைக்கு தமிழினி எனவும், ஆண் குழந்தைக்கு உதயநிதி எனவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தைக்கு செந்தாமரை எனவும் உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார்.