கஞ்சா, மதுவை ஒழிக்க வேண்டியது தி.மு.க.வின் கடமை - பிரேமலதா விஜயகாந்த்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வந்ததுபோல் கஞ்சா, மதுவை ஒழிக்க வேண்டியது தி.மு.க.வின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வந்ததுபோல் கஞ்சா, மதுவை ஒழிக்க வேண்டியது தி.மு.க.வின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
பொதுக்கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தே.மு.தி.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வின் கடமை
தமிழகத்தில் தாராளமாக கிடைத்து வந்த கஞ்சா, டாஸ்மாக் மதுபானங்களுடன் தற்போது கள்ளச்சாராயத்தையும் சேர்த்து தி.மு.க. அரசு ஒட்டுமொத்த தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றி உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவந்தது போல் மது, கஞ்சா உள்ளிட்டவற்றை உடனடியாக ஒழிக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர். இது தி.மு.க. அரசு தனது தவறை மறைப்பதற்காக செய்த செயலாகும்.
கண்டனம்
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியதை தே.மு.தி.க. கண்டிக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.