தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது -அண்ணாமலை பேச்சு
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது என்று தூத்துக்குடி பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
தூத்துக்குடி,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் நேற்று 27-வது தொகுதியாக தூத்துக்குடியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொண்டர்களுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட அண்ணாமலைக்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள், கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டை ரோடு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, வ.உ.சி. சாலை, மார்க்கெட் சாலை, அந்தோணியார் ஆலயம் சந்திப்பு, வி.இ.ரோடு, கான்வென்ட் ரோடு வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு மதியம் 12.45 மணியளவில் சண்முகபுரம் கன்னி விநாயகர் கோவில் சந்திப்புக்கு வந்தார்.
அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
கடன் வாங்குவதில் முதல் மாநிலம்
தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.96 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளார். கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் சத்துணவில் அழுகிய முட்டை போடுவதால் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களுக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை தந்து உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் ஒரு மீனவர் கூட மரணமடையவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் 5 விதமான பொய் பிரசாரங்களை கூறி மக்களை சந்திக்க வருவார்கள். அதனை முறியடிக்க நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம். 3-வது முறையாக பிரதமராக மோடி வர நாடு முழுவதும் 400 தொகுதிகளை வென்றால் போதாது. நாம் வெற்றியின் பக்கத்தில் வந்து விட்டோம். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.வை வேரோடு சாய்த்து வீச வேண்டும். தூத்துக்குடியில் இருந்து அந்த மாற்றம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பூக்களை தூவி வரவேற்பு
முன்னதாக பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு மக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.
சலூன் நூலகத்துக்கு புத்தகம்
தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் கடைக்கு சென்ற அண்ணாமலை அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். பொன் மாரியப்பனுக்கு சில புத்தகங்களை வழங்கிய அண்ணாமலை, பின்னர் சென்னை சென்றதும் 100 புத்தகங்களை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். மேலும் கடை விரிவாக்க பணிகளுக்காக நிதியுதவியும் வழங்கினார்.