தி.மு.க. வசம் இருந்த துணை தலைவர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது
பத்மநாபபுரம் நகராட்சியில் தி.மு.க. வசம் இருந்த துணை தலைவர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது.
தக்கலை:
பத்மநாபபுரம் நகராட்சியில் தி.மு.க. வசம் இருந்த துணை தலைவர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது.
துணை தலைவர் தேர்தல்
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அருள் சோபன் உள்ளார். இதில் துணை தலைவராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த மணி சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது.
இந்தநிலையில் காலியான துணைத்தலைவர் பதவிக்கு நேற்று நகராட்சி அலுவலத்தில் தேர்தல் நடந்தது. நகராட்சி தலைவர் அருள் சோபன் முன்னிலையில் ஆணையர் லெனின் தேர்தலை நடத்தினார். இதில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட பா.ஜ.க. கவுன்சிலர் உண்ணிகிருஷ்ணன், தி.மு.க. கவுன்சிலர் ஜெயசுதா ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
பா.ஜ.க. வெற்றி
நகராட்சியில் 21 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர், பா.ஜ.க. கவுன்சிலர்கள் 7 பேர், மதச் சார்பற்ற ஜனதாதளம் கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர்கள் 6 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களித்தனர். தி.மு.க.வை சேர்ந்த மணி இறந்ததால் அந்த இடம் மட்டும் காலியாக இருந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கவுன்சிலர் உண்ணி கிருஷ்ணன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஜெயசுதாவுக்கு 8 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இந்த வெற்றி மூலம் தி.மு.க.விடம் இருந்த துணைத்தலைவர் பதவியை பா.ஜ.க. கைப்பற்றியது.
சுயேச்சை கவுன்சிலர்கள்
ஏற்கனவே உண்ணி கிருஷ்ணன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த அருள் சோபனை எதிர்த்து போட்டியிட்டவர். அப்போது அருள்சோபன் 12 வாக்குகள் பெற்று தலைவர் பதவியை கைப்பற்றி உண்ணி கிருஷ்ணனை தோற்கடித்தார்.
பிறகு நடந்த துணை தலைவர் தேர்தலிலும் உண்ணிகிருஷ்ணன் களத்தில் குதித்தார். அதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்தநிலையில் தற்போது காலியாக இருந்த துணை தலைவர் தேர்தலில் உண்ணி கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டு தி.மு.க. வசம் இருந்ததை தட்டி பறித்துள்ளார். தி.மு.க.வுக்கு வாக்களித்த சுயேச்சை கவுன்சிலர்கள் தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறி வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.