தி.மு.க. அரசு சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை கோபியில் அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க. அரசு சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கோபியில் அண்ணாமலை குற்றம் சாட்டி பேசினார்
தி.மு.க. அரசு சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கோபியில் அண்ணாமலை குற்றம் சாட்டி பேசினார்.
மாற்றம் வேண்டும்
ஈரோடு மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோபியில் நேற்று இரவு நடைபயணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோபியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
அரசியலில் மாற்றம் வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அந்த மாற்றம் நடக்க வேண்டும். பா.ஜனதாவை நம்பி ஏராளமான இளைஞர்கள் இந்த கூட்டத்தில் கூடி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது. தி.மு.க. அரசு சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுதான் தி.மு.க.வின் சாதனையாகும். இந்த ஆட்சி எப்போது போகும் என தமிழக மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் இல்லாத பிரதமர் மோடி தலைமையிலான அரசை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.
தூர்வாரவில்லை
மத்திய அரசு வீடு வீடாகச் சென்று திட்டங்களை கொடுத்து வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த அரசு ஊழல் அரசாங்கமாக திகழ்கிறது. மத்திய அரசு பணம் வழங்கிய பின்னரும் வாய்க்காலை கூட தமிழக அரசு தூர்வார வில்லை. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களை பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார். தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு எங்களது கூட்டணியை சேர்ந்த 39 எம்.பி.க்களை அனுப்பினால் தமிழகம் வளர்ச்சி அடையும். பாதுகாக்கப்பட்ட சிறந்த வேளாண்மை மண்டலமாக கோபி பகுதியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.