தி.மு.க. அரசு வரி மேல் வரி விதித்து மக்களை வாட்டுகிறார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


தி.மு.க. அரசு வரி மேல் வரி விதித்து மக்களை வாட்டுகிறார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x

மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க. அரசு வரி மேல் வரி விதித்து மக்களை வாட்டுகிறார்கள் என்று கூறினார்.

மதுரை

மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க. அரசு வரி மேல் வரி விதித்து மக்களை வாட்டுகிறார்கள் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜான்சிராணி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த திட்டமே பெறும் குழப்பமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வெறும் உப்புமா தருவது தான் ஆரோக்கியமான உணவா? நகர் பகுதியில் குழந்தைகளை பள்ளியில் போய் வெறும் உப்புமா சாப்பிடு என்று பட்டினி போட்டு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அனுப்புவார்களா?.

வரி உயர்வு

தமிழகத்தில் கட்டுமான பொருட்கள், சமையல் பொருட்கள் என அனைத்தும் விலை ஏறி விட்டது. வீட்டுவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு. மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சி வரி மேல் வரி விதித்து மக்களை வாட்டி வதைக்கிறது. மத்திய அரசு குறித்து இங்கு தி.மு.க. வீராப்பு பேசுகிறார்கள். ஆனால் டெல்லிக்கு போனால் குனிந்து விடுகிறார்கள். எங்களை அடிமை அரசு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது தி.மு.க, தான் அடிமைக்கு எல்லாம் அடிமை அரசாய் இருக்கிறது.

குடும்ப ஆட்சி

பசியோடு இருந்த யானையை கரும்பு காட்டிற்குள் விட்டால், அது அனைத்தையும் அழித்து விடும். அது போல 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத தி.மு.க. இப்போது ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்தையும் சுரண்டி கொண்டு இருக்கிறது. அத்தனை துறைகளிலும் கலெக்‌ஷன், கரெப்ஷன் தான். அண்ணாவின் கொள்கைகளை தி.மு.க. குழி தோண்டி புதைத்து விட்டார்கள். அனைவருக்குமான கட்சி, இன்று ஸ்டாலினின் குடும்ப கட்சியாக மாறி விட்டது.

மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு கூட சரியாக சம்பளம் போடாமல் இருப்பது தான் தி.மு.க.வின் திராவிட மாடல் அரசு. நகை கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 என்று மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, இப்போது மக்களுக்கு அல்வா கொடுத்து விட்டார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. ஆனால் இனிவரும் தேர்தலில்களில் 30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story