அ.தி.மு.க.வை உடைக்க தி.மு.க. சதி செய்து கொண்டிருக்கிறது வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க.வை உடைக்க துரோகிகளோடு சேர்ந்து தி.மு.க. சதி செய்து கொண்டிருக்கிறது என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க.வை உடைக்க துரோகிகளோடு சேர்ந்து தி.மு.க. சதி செய்து கொண்டிருக்கிறது என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூருக்கு வருகை
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் வேலூர் மாவட்டத்திற்கு நேற்று முதல் முறையாக வருகை தந்தார். சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் அவருக்கு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ். ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி பூங்கொத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை எப்பாடுபட்டதாவது உடைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி கொண்டிருக்கிறார். அவருடைய தந்தை மு.கருணாநிதி பலமுறை உடைக்க முயற்சி செய்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் அ.தி.மு.க.வை மு.கருணாநிதியால் உடைக்க முடியவில்லை. அவராலேயே முடியவில்லை. இந்த ஸ்டாலினாலா அ.தி.மு.க.வை உடைக்க முடியும். இங்கிருக்கும் தொண்டர் பட்டாளங்களால் நிறைந்தது அ.தி.மு.க.
மு.க.ஸ்டாலின் அவர்களே சில துரோகிகளோடு சேர்ந்து கொண்டு இந்த இயக்கத்தை முடக்கலாம் என்று எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணினால் எதிர்காலத்தில் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது.
பொங்கல் பரிசில் ரூ.500 கோடி ஊழல்
தி.மு.க.வினர் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மிரட்டி பார்க்கிறீர்கள். சோதனைகளை படிகட்டுகளாக்கி சாதனை படைத்த கட்சி அ.தி.மு.க. என்று வரலாறு கூறுகிறது. அரிதாக மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதனை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள். எப்போதும் தி.மு.க. மக்களுக்கு நல்லது செய்ததாக வரலாறு கிடையாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சு. அப்படியே அந்தர் பல்டி அடித்து விடுவார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றார்கள். ஆனால் என்னாச்சு?. அது ஏமாற்று வேலை. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து இல்லதரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை கொடுப்போம் என்றார்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். அவர்களின் ஊதியம் அதிகரிக்கப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்கப்படும் என்றார்கள். ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. பொங்கல் பரிசில் வழங்கப்பட்ட பொருட்களை யாரும் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. பொங்கல் பரிசு என்ற பெயரில் ரூ.500 கோடி ஊழல் செய்தது தான் மிச்சம்.
அ.தி.மு.க.வை உடைக்க சதி
அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வினரை முடக்க முடியாது. எத்தனை பொய் வழக்கு போட்டாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், சிதறடிக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு சதி செய்து கொண்டிருக்கிறது. அதனை முறியடிக்கும் சக்தி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உண்டு. யாரையும் அடக்கி ஆள முடியாது. அடக்கி ஆள நினைத்தால் இலங்கை நிலைதான் இங்கும் வரும். மக்கள் புரட்சி வெடித்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
14 மாத தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.. அதே நிலைமை வந்தாலும் வந்து விடும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு மாநிலத்துக்கும் தேர்தல் வந்தாலும் வரும். இந்த அரசாங்கம் எப்போது வீட்டுக்கு செல்லும் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வெள்ளி கஜாயும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ரவிபாபு, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பகுதி செயலாளர்கள் சொக்கலிங்கம், பேரவை ரவி, நாராயணன், ஜனார்த்தனன், ஜெய்சங்கர், சுந்தரம், குப்புசாமி, பாண்டியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத், இணைச்செயலாளர்கள் கே.ஆர்.ரவி, கே.பி.ரமேஷ், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.சுந்தரராஜி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம்.ஏ.ராஜா, வக்கீல் அணி மாவட்ட செயலாளர் கே.பாலச்சந்தர், பகுதி பொருளாளர் ஜி.எஸ்.ஏ. ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார், வட்ட செயலாளர்கள் சி.கே.எஸ். வினோத்குமார், ஜி.கே. முரளிகுமார், நிர்வாகி பி.எஸ்.பழனி உள்பட மாவட்ட நிர்வாகிகள், அணி மாவட்ட நிர்வாகிகள், பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் மற்றும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் அ.தி.மு.க.நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.