விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி விலை உயர்வால் காட்சியாக மாறிவிட்டது போன்று தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், மல்லிஇலை கட்டு ஆகியவற்றை கட்டி தொங்கவிட்டு இருந்தனர்.
மேலும் தி.மு.க.அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை தடுக்கக்கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும் துணை பொதுச்செயலாளருமான நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் திண்டுக்கல் சினிவாசன் பேசியதாவது:-
கொடநாடு சம்பவம்
காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. இதை தடுக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நியாயமா? என்று கம்யூனிஸ்டு தோழர்கள் பதில் கூற வேண்டும். கடந்த ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். அதில் ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா, வைத்திலிங்கம் உள்ளிட்ட துரோகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டு அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தனர். அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றிவாகை சூடியிருக்கிறார்.
இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் அறிவித்துள்ளார். இந்த கொலை, கொள்ளையை நாம் நடத்தியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது தான், கொடநாடு சம்பவம் குறித்து விசாரித்து கேரளாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
234 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு
பிரதமர் நரேந்திரமோடியின் அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இருக்கும் படத்தை பார்த்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை அருகில் வைத்து கொண்டு ஊழலை பற்றி பிரதமர் பேசுகிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் ஊழலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போன்று பேசுகிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.
மளிகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் பெண்கள் தினமும் தி.மு.க. ஆட்சியை திட்டுகின்றனர். தெரியாமல் ஓட்டுப்போட்டு ஏமாந்து விட்டோம் என்று புலம்புகின்றனர். அதேபோல் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்துக்கு பல்வேறு விதிகளை வகுத்து ஒரு கோடி பேருக்கு தான் கொடுப்போம் என்று அரசு கூறுகிறது. அரசியல் ஆண்மை இருந்தால் தற்போது தேர்தல் நடத்துங்கள். 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சர் ஆக்குவோம்.
எத்தனை அமைச்சர்கள்
தி.மு.க. ஆட்சியை கலைக்க முயற்சி நடப்பதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். இன்னும் 2¾ ஆண்டு ஆட்சி செய்து மக்களுக்கு கொடுமைகளை செய்யுங்கள். அதன்மூலம் 234 தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கும் வேலையை நீங்களே செய்வீர்கள். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கிறார். மற்றொரு அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதற்கிடையே அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கேட்கிறது. இன்னும் எத்தனை தி.மு.க. அமைச்சர்கள் அமலாக்கத்துறையிடம் சிக்க போகிறார்களோ? தெரியவில்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, எடப்பாடி பழனிசாமி மீது முதல்-அமைச்சர் குற்றம்சாட்டுகிறார்.
பிரதமர் வேட்பாளர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின் தற்போது ஏன் கூறவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அனைவரும் பிரதமர் ஆக ஆசைப்படுகின்றனர். ஆனால் 2-வது முறையாக பிரதமரான நரேந்திரமோடி உலகுக்கு தலைமை தாங்கும் நிலையை இந்தியாவுக்கு ஏற்படுத்தி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது பெங்களூருவில் குண்டுராவ் வீட்டுக்கு சென்றார். அங்கு விருந்து உபசரிப்பின் போது காவிரிநீர் கொடுத்தால் தான், தண்ணீர் குடிப்பேன் என்று கூறி காவிரிநீரை பெற்று தந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் பெங்களூருக்கு சென்ற மு.க.ஸ்டாலின் மேகதாது அணை, காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசாமல் வந்துள்ளார். இவர்கள் எப்படி தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.