மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்
மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசியதாவது:--
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந் தேதி கோவை வருகிறார். அவர், 24-ந் தேதி கிணத்துக்கடவில் நடை பெறும் விழாவில் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கு கிறார். இதையடுத்து, பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த வர்கள் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்து கொள்கிறார்.
திராவிட மாடல் பயிலரங்கம்
தமிழகத்தில் 234 தொகுதியிலும் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை 3 நாட்களில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேரையாவது கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். கோவை -அவினாசி ரோட்டில் புதிதாக கட்சி அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இளைஞர் அணியினரின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்த மசோதா இலவச மின்சாரம் பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும். அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 3,041 பூத்களிலும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.