கோவையில் த.மு.மு.க.வினர் ரெயில் மறியல்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் த.மு.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை, ஜூன்.15-
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் த.மு.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரெயில் மறியல் போராட்டம்
பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் நாடுமுழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க.) கோவை மத்திய மாவட்டம் சார்பில் கோவையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று மாலை 3 மணியளவில் கோவை ரெயில்நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் இரும்பு தடுப்புகொண்டு ரெயில்நிலையம் முன் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது.
தள்ளுமுள்ளு
இந்த நிலையில் மாலை 3.30 மணியளவில் த.மு.மு.க.வினர் அங்கு ஊர்வலமாக வந்தனர். இதற்கு மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சாதிக், அகமது கபீர், செயற்குழு உறுப்பினர் அக்பர், முஜீப் ரகுமான், ஆசிப் அகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பின்னர் த.மு.மு.க.வினர் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பியவாறு திடீரென போலீசாரின் தடுப்புகளை மீறி ரெயில்நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும்-போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறி த.மு.மு.க.வினர் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே த.மு.மு.க.வினர் சிலர் மற்றொரு நுழைவு வாயில் வழியாக ரெயில்நிலையத்துக்குள் சென்று அங்கு புறப்பட தயாராக இருந்த கொச்சிவேலி செல்லும் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 பேர் கைது
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் மற்றும் கோவை மாநகர போலீசார் விரைந்து சென்று அவர்களை வெளியே அழைத்து வந்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 50 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் சர்புதீன் நிருபர்களிடம் கூறும்போது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தாக்குதல், கைது நடவடிக்கை, வீடுகளை இடிப்பது போன்ற மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபட்ட உத்தரபிரதேச அரசை கண்டித்தும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதேபோல் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை ஆற்றுப்பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆஷிக் அஹமது தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் அபுதாஹீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மாணவர் அமைப்பு (எஸ்.ஐ.ஓ.) சார்பில் உக்கடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ஷபீர் அகமது தலைமை தாங்கினார்.