தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பனவடலிசத்திரம்:
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பெரியகோவிலான்குளம் அரசு தொடக்கப்பள்ளி, குருக்கள்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் குருக்கள்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும் கருத்தானூரில் முதல்-அமைச்சர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக, நவநீதகிருஷ்ணாபுரத்தில் புதிய ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகோவிலான்குளத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, இந்திரா காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓடை, சில்லிகுளம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பரமையா, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னக்குருசாமி, சந்திரசேகரன், வர்த்தக அணி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.